கடலூர் கூத்தப்பாக்கத்தில் பெற்றோரை அடித்து துன்புறுத்திய மகன் போலீசார் விசாரணை
கடலூர் கூத்தப்பாக்கத்தில் பெற்றோரை அடித்து துன்புறுத்திய மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினா்.
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 69). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் 'ஹலோ சீனியர்' காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது மகன் சுரேஷ் தன்னையும், தனது மனைவியையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி அடித்து துன்புறுத்தி வருகிறார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேஷ் தனது பெற்றோரை துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், இனி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரேசை எச்சரித்தனர். மேலும் இனிமேல் எந்தவொரு பிரச்சினையும் செய்யக்கூடாது என அவரிடம் போலீசார் எழுதி வாங்கிச்சென்றனர்.