கடலூர் முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூர் முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி (2022) சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி முன்னிலை வகித்தார். இதில் கடலூர் விற்பனை நிலைய மேலாளர் விமல்ராஜ் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இது பற்றி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
ரூ.14 கோடி இலக்கு
கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு சேலைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச்சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களான முல்லை விற்பனை நிலையத்திற்கு ரூ.2 கோடியும், சிதம்பரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.80 லட்சமும், விருத்தாசலம் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி, நெய்வேலி விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி மற்றும் மங்கை விற்பனை நிலையத்திற்கு ரூ.70 லட்சமும், பண்ருட்டி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனவு நனவு திட்டம்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந் தோறும் ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. ஆகவே அனைத்து துறை ஊழியர்களும், கைத்தறிக்கு கைகொடுத்து உதவ வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.