தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்கக்கோரி         கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

முற்றுகை

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சான்றோர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மதியம் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தேசிய ஊரக திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு வேலை வழங்க மறுப்பது ஆகியற்றை கண்டித்தும், பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வேலை செய்வதற்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், துணை தலைவர் பாண்டியன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் மற்றும் நிர்வாகிகள், தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story