கடலூர் சிவசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


கடலூர் சிவசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சிவசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர்

கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.

இதையடுத்து சந்திர பிரபை வாகனம், மயில் மற்றும் காமதேனு வாகனம், பல்லக்கு, புதிய வெள்ளி மயில், விமானம், நாக வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

கடந்த 1-ந்தேதி முருகன் ரிஷப வாகனத்திலும், தேவியர் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பாரிவேட்டை காணுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது வண்டிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று கோபுர தரிசனம்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு கோபுர தரிசனம், பக்தர்கள் காவடி எடுத்தல் நிகழ்ச்சியும், 108 சங்கு பூஜை மகா அபிஷேகமும், இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story