கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம் வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது
கடலூர் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்கிறது. இதன் மூலம் வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
சாத்தூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் மூலம் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெய்யும் மழைநீரும் சேர்ந்து தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தென் பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறி பாய்கிறது. ஏற்கனவே வெள்ளம் வந்த போது, கும்தாமேடு தரைப்பாலம் மூழ்கியது.
வீணாகும் தண்ணீர்
அதேபோல் தற்போதும் தரைப்பாலம் மூழ்கி வருகிறது. இதன் காரணமாக கும்தாமேடு தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாலத்தின் வழியாக தான் கும்தாமேடு சுற்றியுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலூருக்கு வந்து செல்வார்கள். இது தவிர மது பிரியர்களும் புதுச்சேரிக்கு சென்று சாராயம், மது அருந்தி விட்டு வருவார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அப்பகுதி மக்கள் கடலூருக்கு வர மாற்று வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் தென்பெண்ணை ஆறு அணைக்கட்டில் கரைபுரண்டு ஓடுகிறது.
இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,480 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த நீர் தென்பெண்ணையாற்றில் சீறி பாய்ந்து வருகிறது. இந்த நீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றார். இருப்பினும் இந்த நீர் அனைத்தும் கடலூர் தாழங்குடா அருகே முகத்து வாரம் வழியாக வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.