கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கிள்நாயுடு தெருவில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 96-ம் ஆண்டு செடல் - தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் வீதி உலா, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் சக்தி கரகம் கொண்டு வருதல், மதியம் 12 மணிக்கு செடல் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தீபாராதனை காண்பித்தவுடன், இசை வாத்திய கருவிகள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
விழாவில் அறங்காவலர் குழு திருஞானசேகர், கமலநாதன், என்.கே.ராஜ், ஸ்ரீதர் உள்பட அறங்காவலர்கள் குழுவினர், விழா குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.