கடலூர் வண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கடலூர் வண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் வரவூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் திருப்பணி வேலைகள் முடிந்து கும்பாபிஷேக வேலைகள் தொடங்கியது. கடந்த 22-ந்தேதி அனுக்ஞை, கணபதி பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடமும் திறக்கப்பட்டது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலி, 23-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், கலா கர்ஷனம், யாக சாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, திரவியாகுதி நடந்தது. நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, மண்டல பூஜை, மூல மந்திர ஹோமம், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், 3-ம் கால பூஜை, வடுகை யாக பூஜை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, நவசக்தி அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
நேற்று விக்ன விநாயகர் பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, அஸ்திர ஹோமம், மூல மந்திர ஹோமம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தை உற்சவ ஆச்சாரியார் ஊர்வலமாக கொண்டு வந்தார். அவருடன் ஊர் முக்கியஸ்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.