சம்பளம் கேட்ட கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டல்


சம்பளம் கேட்ட கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டல்
x

ஒமன் நாட்டிற்கு வெல்டிங் வேலைக்கு சென்றவர்களுக்கு தோட்ட வேலை கொடுக்கப்பட்டது. சம்பளம் கேட்ட கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

கடலூர்

சுட்டுக்கொலை

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 40). இவரது மனைவி வித்தியா. பி.காம். பட்டதாரியான முத்துக்குமரன் உள்ளூரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் வேலைக்காக குவைத் சென்றார். ஆனால் அங்கு ஒட்டகம் மேய்க்க கூறி உள்ளனர். இது பற்றி முத்துக்குமரன் அவரது முதலாளியிடம் கேட்ட போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரன் கடந்த 7-ந்தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சுவடு மறைவதற்குள் தற்போது மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது கடலூரில் இருந்து ஓமனுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், தங்களது சம்பளத்தை கேட்டதால் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

தோட்ட வேலை

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணனை நேற்று பெண்கள் சிலர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரிய காரைக்காட்டை சேர்ந்த செல்வரங்கன், பில்லாலி தொட்டி பிரசாந்த், பகண்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெல்டிங் வேலைக்காக ஓமன் நாட்டிற்கு சென்றனர். அங்கு சென்றதும் வெல்டிங் வேலை கொடுக்காமல், அவர்களுக்கு தோட்ட வேலை கொடுத்தனர்.

சுட்டு கொன்று விடுவோம்

இதையடுத்து 4 மாதம் வேலை பார்த்ததற்கான சம்பளம் கேட்டனர். அதற்கு, தோட்ட உரிமையாளர்கள் சம்பளம் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் சம்பளம் கேட்டால் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் ஊருக்கு செல்ல வேண்டுமானால் ரூ.2 லட்சம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்லுங்கள் என மிரட்டி வருகின்றனர். அதனால் ஓமன் நாட்டில் சிக்கிக் கொண்டு சொந்த ஊருக்கு வர முடியாமல் தவிக்கும் 3 பேரையும் மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story