அரசை நம்பி பல ஏக்கரில் சாகுபடி:பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


அரசை நம்பி பல ஏக்கரில் சாகுபடி:பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:46 PM GMT)

அரசை நம்பி பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளதால், பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் 3-வது அல்லது கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பெரியவடவாடி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து கலெக்டரிடம், நாங்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு வெட்டி சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். கரும்புக்கான தொகை வராத நிலையில், அந்த ஆலை திடீரென மூடப்பட்டது. இதனால் நாங்கள் பயிர் செய்த கரும்பை அதிக தொலைவில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகிகள் தங்களுக்கு தான் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே நாங்கள் பயிர் செய்த கரும்பை அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

காப்பீடு தொகை

நல்லூர் சுப்பிரமணி:- தங்கள் பகுதியில் பயிர் காப்பீடு செலுத்தி பல விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விடுபட்டவர்களுக்கும் உடனடியாக காப்பீடு தொகை வழங்க வேண்டும்.

மங்களூர் மகாராஜா:- திட்டக்குடி வெலிங்டன் ஏரி அருகில் வெலிங்டன் பிரபுவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

யூரியா தட்டுப்பாடு

பண்ருட்டி தேவநாதன்:- பண்ருட்டி தாலுகாவில் யூரியா உரம் இருப்பு இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

மேல்புளியங்குடி செல்வராஜ்:- ஸ்ரீமுஷ்ணம் தாலுகா விவசாயிகள் ஏதேனும் மனு கொடுக்க வேண்டும் என்றால் நீண்ட தொலைவில் உள்ள சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் காலவிரயமாவதுடன், அதிக செலவாகிறது. எனவே ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவை, அருகில் உள்ள விருத்தாசலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகையுடன்...

குறிஞ்சிப்பாடி குமரகுரு:- கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்புகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால் அரசை நம்பி கரும்பு பயிர் செய்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளாகிய எங்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லை.

(இதே கோரிக்கைைய பல்வேறு விவசாயிகளும் வலியுறுத்தி பேசினர்.)

அம்மை நோயால் பாதிப்பு

கிள்ளை ரவீந்திரன்:- நடப்பாண்டில் விவசாயிகள் தாமதமாக பயிர் சாகுபடி செய்துள்ளனர். அதனால் பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் வகையில் ஏப்ரல் மாதம் வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளது. அதனால் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம், அனைவரும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.


Next Story