இயற்கை வேளாண் முறையில் பன்னீர் திராட்சை சாகுபடி


இயற்கை வேளாண் முறையில் பன்னீர் திராட்சை சாகுபடி
x

பொம்மனப்பாடியில் இயற்கை வேளாண் முறையில் விவசாயி ஒருவர் பன்னீர் திராட்சை சாகுபடி செய்துள்ளார்.

பெரம்பலூர்

பன்னீர் திராட்சை சாகுபடி

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் மற்றும் மிதமான வெப்பம் நிலவும் பகுதிகளில் மட்டுமே திராட்சை சாகுபடியில் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க முடியும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்தநிலையில் தான் வெப்ப மண்டல பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே எசனை அருகே அரசலூர் கைகாட்டி பகுதியில் விவசாயி சுருளிராஜ் என்பவர் இயற்கையான முறையில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்.

அவரை தொடர்ந்து வேப்பந்தட்டை தாலுகா, நெற்குணத்தில் விவசாயி பரசுராமன் என்பவர் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடியில் விவசாயி ராமசாமி என்பவர் இயற்கையான முறையில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்.

இயற்கையான முறையில்...

கடந்த ஆண்டு அவர் மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவியுடன் மானிய தொகை பெற்று பந்தல் அமைத்த இவர் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இருந்து பன்னீர் திராட்சை கன்றுகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் நடவு செய்து இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்துள்ளார். கடந்த மாதம் இறுதியில் கொத்து கொத்தாக பந்தல் நிறைய காய்க்க தொடங்கிய பன்னீர் திராட்சைகள் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில் இனி ஆண்டுக்கு 3 போகம் திராட்சை அறுவடை செய்ய முடியும். முதல் முறை பந்தல் அமைத்து திராட்சை நடவு செய்தது மட்டுமே கூடுதல் செலவினம். அதன் பின் முறையாக பராமரித்தால் போதும் 20 ஆண்டுகள் வரை இதே கொடியில் மகசூல் செய்ய முடியும் என்பதால் சாகுபடி செலவும் குறையும், என்றார். மேலும் இன்னும் மானிய தொகை அதிகரிக்கவும், பந்தலை சுற்றி வலை அமைக்கவும் மானிய தொகை தோட்டக்கலைத்துறை வழங்கினால் நிறைய விவசாயிகள் பன்னீர் திராட்சையை சாகுபடி செய்ய முன்வருவார்கள், என்றார்.


Next Story