தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பணி பாதிப்பு


தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பணி பாதிப்பு
x

தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பணி பாதிப்பு

திருப்பூர்

தளி

கோடந்தூர் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளது.

சாகுபடி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டு மழை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை, கருமுட்டி, முள்ளுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இயற்கையோடு இணைந்து அதன் வளங்களைக் கொண்டு காலம் காலமாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத்துக்கு பிரதானமாக உள்ள தண்ணீரை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆறுகள் அளித்து வருகிறது. அதைக் கொண்டு இஞ்சி, நெல், தக்காளி, மிளகாய், பீன்ஸ், தென்னை, வாழை, மஞ்சள், பாக்கு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம், உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் செயற்கை இடர்பாடாக உருவெடுத்துள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரதான தொழிலான விவசாயத்தை கோடந்தூர் வனப்பகுதியில் அடியோடு முடக்கி விட்டது. இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை

வனப்பகுதியில் சமதளப்பரப்பு போன்று எளிதில் சாகுபடி பணியை மேற்கொள்ள இயலாது. கரடு முரடான பகுதிகளை பல மாத உழைப்பை கொட்டி ஓரளவிற்கு சமன் செய்து உழவுக்கு தயார்படுத்த வேண்டும். அதன் பின்பே நிலத்தை பக்குவப்படுத்தி சாகுபடி பணிகளை துவக்க இயலும்.அதுவும் விவசாயத்தின் முக்கிய மூலதனமான தண்ணீர் தாராளமாக கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் கோடந்தூர் வனப்பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.சின்னாற்றின் மூலமாக நீர்வரத்தை பெற்று வந்த எங்கள் பகுதி தற்போது முற்றிலுமாக நீர்வரத்து இல்லாமல் தவித்து வருகிறது.இதனால் தென்மேற்கு பருவமழைக்கு பின்பு சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றோம்.

இதனால் விளை நிலங்கள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த வருடம் நல்ல முறையில் மழை பெய்தும் சாகுபடி பணிகள் தொடங்க முடியாது வேதனை அளிக்கிறது. விவசாய தொழிலை ஊக்குவித்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.பிரதான தொழிலான விவசாயம் முற்றிலுமாக முடங்கி விட்டதால் எங்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது.எனவே வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறையினர் இணைந்து கோடந்தூர் பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்கு தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்து தர வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.

----


Next Story