எந்திரம் மூலம் நடவு பணிகள் தீவிரம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் எந்திரம் மூலம் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு குறுவை பயிர் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
எந்திரம் மூலம் நடவு
சில விவசாயிகள் விதைகளை வயல்களில் தெளித்தும், சில விவசாயிகள் நாற்று நட்டும் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். வடபாதிமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் நடவு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எந்திரம் மூலம் நடவு செய்வது எளிதாக இருப்பதாகவும், தற்போது எந்திர நடவு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகிறார்கள்.
பாதிப்பு ஏற்படும்
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், 'ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு போதுமானதாக இல்லை. இதனால், பயிர்களின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே குறுவை நடவு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள வசதியாக வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறு ஆகிய ஆறுகளில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்றனர்.