சிவகாசியில் கலாசார பல்சுவை நிகழ்ச்சி
பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சிவகாசியில் கலாசார பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி
பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சிவகாசியில் கலாசார பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழி
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிவகாசி சிவன்கோவில் அருகே நேற்று காலை கலாசார பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
இதில் அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மேயர் சங்கீதா இன்பம், துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், தாசில்தார் லோகநாதன், கமிஷனர் சங்கரன், சுற்றுலாத்துறை அலுவலர் உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் கலாசார பல்சுவை நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 3 வயது சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கலாசார திருவிழா
நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் தமிழ்நாடு கலாசாரத்தின் படி பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் மல்லர் கம்பு, சிலம்பாட்டம், கயிறு ஏறுதல், இளவட்டகல் தூக்குதல், தடைகள் தாண்டுதல், வலையில் பந்து வீசுதல், தற்காப்பு கலைகள் என கலாசாரத்தை போற்றும் விளையாட்டுகள் நடந்தது.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலாசார பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் செய்திருந்தார். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.