குமுளி மலைப்பாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்:கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இயற்கை வளம் நிறைந்த இந்த மலைப்பாதையில் மான், குரங்கு, காட்டுப்பன்றிகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர். இதனால் குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இந்த பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவுகளை வனவிலங்குகள் தின்பதால் அவை உயிர் இழக்க நேரிடுகின்றன. எனவே வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றினர். ஆனால் அதன்பிறகு கடந்த சில நாட்களாக மீண்டும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை செல்லும் மலைப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். அனுமதியின்றி மலைப்பாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.