யாரும் வாங்க ஆர்வம் காட்டாததால் குப்பையில் கொட்டப்படும் கறிவேப்பிலை
மழையால் பாதிக்கப்பட்டு நிறமாறிய கறிவேப்பிலையை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் குப்பையில் கொட்டப்படுகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
கும்பகோணம்:
மழையால் பாதிக்கப்பட்டு நிறமாறிய கறிவேப்பிலையை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் குப்பையில் கொட்டப்படுகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
தாராசுரம் மார்க்கெட்
கும்பகோணம்- தஞ்சை சாலையில் தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிவேப்பிலை
கும்பகோணத்தில் கடந்த மாதம் வரை காய்கறிகளின் விலை அதிகரித்து இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி, முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென குறைந்துள்ளது. தக்காளி, சின்ன வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை தற்போது விலை குறைந்து காணப்படுகிறது. இந்த கறிவேப்பிலையில் மருத்துவகுணங்கள், பல்வேறு சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. காரத்துடன் கூடிய கசப்பு சுவையை கொண்ட கறிவேப்பிலையை சைவ-அசைவ உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.
தொடர் மழை
இவ்வாறு மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கும்பகோணம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கறிவேப்பிலை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்க்கெட் மற்றும் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறி வாங்குவோர்களுக்கு இலவசமாக கறிவேப்பிலை கொடுப்பது வழக்கம்.
காய்கறிகளுக்கு இலவசமாக கிடைத்த கறிவேப்பிலை தற்போது விலை குறைவாக இருந்தாலும் வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. காரணம் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கறிவேப்பிலை கருகி நிறமாறி
பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையான கறிவேப்பிலை நேற்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்து.
குப்பையில் கொட்டும் நிலை
இருப்பினும் மழையால் கறிவேப்பிலை நிறமாறியதால் பொதுமக்கள் யாரும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக கறிவேப்பிலையை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து தாராசுரம் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கறிவேப்பிலை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு வரத்து வந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது.
மழையால் அழுகியது
தற்போது உற்பத்தி அதிகரித்து விட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்வதால் கறிவேப்பிலை அழுகிய வருகிறது. கும்பகோணத்திற்கு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. வாகனங்களில் கொண்டு வரும் போதே கறிவேப்பிலை சேதம் அடைந்து வீணாகிறது. விற்பனைக்கு வரும் போது அது மேலும் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் மாறுவதால் மக்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் விற்பனையாகமல் தேங்கிவிடுவதால் குப்பைகளில் கெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.