காடை வறுவலில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
ரணியில் உள்ள அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட காடைவறுவலில் புழுக்கள் நெளிந்ததால் அதனை சாப்பிட வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆரணி
ஆரணியில் உள்ள அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட காடைவறுவலில் புழுக்கள் நெளிந்ததால் அதனை சாப்பிட வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அசைவ ஓட்டல்
ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி மகன் விநாயகம் (வயது 35) என்பவர் அசைவ உணவு சாப்பிட சென்றார்.
அவர் காடை வறுவல் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சர்வர் கொண்டு வந்த காடைவறுவலை சாப்பிட எடுத்தபோது உள்பகுதியில் புழுக்கள் நெளிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது சம்பந்தமாக ஊழியர்களிடமும், உரிமையாளரிடமும் வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டலில் சாப்பிட்ட விநாயகம், காடைவறுவலில் புழுக்கள் நெளிந்ததை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அதற்குண்டான பில்லையும் செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
வீடியோ பரவியது
பின்னர் அவர் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அசைவு ஓட்டலுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அவர் சாப்பிட்டு வைக்கப்பட்டிருந்த காடை வறுவலையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரணி நகரில் தொடர்ந்து அசைவ ஓட்டல்களில் இது போன்ற சுகாதார கேடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ஓட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.