மரங்களில் பலாக்காய்கள் வெட்டி அகற்றம்


மரங்களில் பலாக்காய்கள் வெட்டி அகற்றம்
x

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் மரங்களில் விளைந்த காய்களை வெட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் மரங்களில் விளைந்த காய்களை வெட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பலா காய்களை வெட்டி அகற்றம்

கூடலூர் பகுதியில் பலாபழங்கள் சீசன் நிலவுகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விவசாய நிலம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மரங்களில் விளைந்த பலாக்காய்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் பெரும்பாலான இடங்களில் பலா காய்கள் அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் வனக்கோட்டத்தில் பாடந்தொரை, புளியம்பாரை, தேவர்சோலை மற்றும் தேவாலா உள்பட பல இடங்களில் விளைந்த பலா காய்களை மரங்களில் ஏறி வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் காட்டு யானைகள் நடமாட்டத்தை காரணம் காட்டி வனத்துறையினர் பலாக்காயை வெட்டி வீணடித்து வருகின்றனர். இதனால் யாருக்கு லாபம் கிடைக்கிறது. கோடை காலத்தில் வறட்சியின் காரணமாக பசுந்தீவனம் பற்றாக்குறையால் விவசாய பயிர்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து பலாப்பழ சீசன் தொடங்கி விடுகிறது.

இதனால் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. இதைத் தடுக்க வனத்துறையினர் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வனப்பகுதியில் பலா உள்ளிட்ட வர நாற்றுகளை அதிக அளவில் நடவு செய்ய வேண்டும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் விவசாயிகளிடமிருந்து சீசன் காலங்களில் பல காய்கறிகளை கொள்முதல் செய்து வனப்பகுதியில் காட்டு யானைகள் சாப்பிடும் வகையில் வீச வேண்டும். இதனால் விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும். காட்டு யானைகள் அதிகளவு ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story