போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளை வெட்டி அகற்றம்
நாகர்கோவில் ஒழுகினசேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெரிய மரத்தின் கிளையை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். அந்த சமயத்தில் 1 மணி நேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெரிய மரத்தின் கிளையை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். அந்த சமயத்தில் 1 மணி நேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மரக்கிளை வெட்டி அகற்றம்
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் ஒழுகினசேரி பாலம் அருகே ஒரு பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பெரிய கிளை ஒன்று சாலை வரை நீண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
நேற்று காலை 7 மணிக்கு அந்த கிளையை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
ஒழுகினசேரியில் இருந்து வடசேரி வரையிலும், ஒழுகினசேரியில் இருந்து அப்டா மார்க்கெட் வரையிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தபடி இருந்தன. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அந்த பெரிய கிளை மரத்தில் இருந்து முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வாகனங்கள் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக சென்றதால் நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
போக்குவரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மரக்கிளையை வெட்டி அகற்றும் பணிக்காக சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இரவு நேரத்தில் மரக்கிளையை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தனர்.