தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை, பணம் கொள்ளை


தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை, பணம் கொள்ளை
x

திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, தனியாக இருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து கம்மல் உள்ளிட்ட நகை மற்றும் பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

தனியாக வசிக்கும் மூதாட்டி

திருப்பத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி ராஜி கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜானகி (வயது 73). லோகநாதன் இறந்துவிட்டார். இவரது மகன் திருப்பதி திருமண மண்டபம் நடத்துவதுடன், பெங்களூருவில் தொழில் செய்து, அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் ஜானகி தனியாக வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி ஊருக்கு வந்து அம்மாவை பார்த்து விட்டு ஊருக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஜானகி தூங்கிக்கொண்டிருந்தார்.

நகை-பணம் கொள்ளை

அப்போது முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று ஜானகியை தாக்கி உள்ளனர். பின்னர் கத்தியால் முகத்தைக் கிழித்தும், இரண்டு காதுகளையும் கம்மலுடன் அறுத்துள்ளனர். மேலும் கழுத்தில் அணிந்து இருந்த செயின் உள்பட 6 பவுன் நகை, பீரோவில் இருந்த பணம் ரூ.15 ஆயிரம், தைக்காமல் வைத்திருந்த பேண்ட், சட்டை துணிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் ஜானகி மயங்கி கிடந்துள்ளார். காலையில் வழக்கம் போல வந்த அவரது உறவினர் மஞ்சுளா வீடு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஜானகி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து பெங்களூருவில் உள்ள மகன் திருப்பதிக்கு தகவல் கொடுத்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணை

பின்னர் ஜானகியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஜானகி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று காதை அறுத்து, நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அவர்கள் தமிழில் பேசியுள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும் அந்தப் பகுதிக்கு வரும் வழியில் 6 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தனர்.

வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story