மதுபான பார் ஊழியருக்கு பட்டா கத்தி வெட்டு
துறையூரில் மதுபான பார் ஊழியரை பட்டா கத்தியால் வெட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துறையூரில் மதுபான பார் ஊழியரை பட்டா கத்தியால் வெட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபான பார்
துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே மதுபான பார் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 27), மருவத்தூரைச் சேர்ந்த பெத்துமலை (50), சங்கர் (45), பெருமாள் (55), தேரப்பம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (30) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் பாரை மூடி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த மர்ம ஆசாமிகள் பூட்டப்பட்டு இருந்த பாரின் கதவை தட்டினர்.
பட்டா கத்தியால் வெட்டு
இதனையடுத்து பார் ஊழியர் சக்திவேல், வேலை நேரம் முடிந்ததால் பாரை மூடி விட்டோம் என்று கூறினார். இதனையடுத்து அவர்கள் கதவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த ஆசாமிகளின் ஒருவன் பட்டா கத்தியை எடுத்து சக்திவேலை வெட்டினான்.
இதை தடுக்க முயன்ற மற்ற பணியாளர்களை சோடா பாட்டில்களால் தாக்கினர். இதனையடுத்து பணியாளர்கள் கூச்சல் போடவே அந்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
பட்டா கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த சக்திவேலை சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலை, நெற்றி, வலது கை உள்ளிட்ட இடங்களில் 24 தையல்கள் போடப்பட்டன. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கத்தியால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.