அண்ணனுக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது
கொடைரோடு அருகே சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
கொடைரோடு அருகேயுள்ள கந்தப்பக்கோட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவருடைய தம்பி கார்மேகம் (43). கூலித்தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குமார் கந்தப்பக்கோட்டை பிரிவில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்மேகம், குமாரிடம் வாக்குவாதம் செய்தார். அதில் ஆத்திரமடைந்த கார்மேகம் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் குமாரை முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து கார்மேகத்தை கைது செய்தார்.
Related Tags :
Next Story