வாழைக்குலை திருட்டை தடுத்த உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு


வாழைக்குலை திருட்டை தடுத்த உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைக்குலை திருடியதை தடுத்த உரிமையாளரை அரிவாளால் வெட்டித் தப்பியோடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே பாகோடு கொல்லன்விளையை சேர்ந்தவர் செல்லன் (வயது 70). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் 100 ஏத்தன் வாழைகளை நட்டு பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்தில் பல வாழைகள் குலை தள்ளியுள்ளன.

இந்த தோட்டத்தில் இருந்து ஏற்கனவே 3 வாழைக்குலைகளை யாரோ மர்ம ஆசாமிகள் வெட்டி சென்றிருந்தனர். இதனால், இரவு நேரம் தோட்டத்தில் செல்லன் காவல் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் செல்லன் தோட்டத்தில் காவல் இருந்தார். இரவு 11½ மணி அளவில் ஒரு ஆசாமி கையில் அரிவாளுடன் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு நின்ற ஒரு வாழைக்குலையை வெட்டியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த செல்லன் அந்த ஆசாமியை பிடித்தார். உடனே அந்த ஆசாமி கையில் இருந்த அரிவாளால் செல்லனின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த செல்லன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து செல்லன் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை செல்லனை அரிவாளால் வெட்டிய ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பேரை பாறையடிவிளையை சேர்ந்த செல்லத்துரை (54) என்பதும், ஏற்கனவே செல்லனின் தோட்டத்தில் இருந்து 3 வாழைக்குலைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story