வெட்டாற்றை உடனடியாக தூர்வார வேண்டும்


வெட்டாற்றை உடனடியாக தூர்வார வேண்டும்
x

கடைமடை வரை தண்ணீர் முழுமையாக சென்றடைய வெட்டாற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கடைமடை வரை தண்ணீர் முழுமையாக சென்றடைய வெட்டாற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெட்டாறு

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திறக்கப்படும் நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளான வெட்டாறு, வெண்ணாறுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படும்.வெட்டாறு மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 600 கிராமங்களில் உள்ள 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

புதர்மண்டி கிடக்கிறது

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர், நெடார் கீழ்ப்பகுதி, வையச்சேரி, மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெட்டாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதன்காரணாக வெட்டாறு முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது.

இதேபோல, ஆற்றின் தலைபகுதியில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

நீர் செல்வதில் சிக்கல்

இதனால் வெட்டாற்றில் தண்ணீர் வந்தாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே வெட்டாற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள கோரை புற்களை அகற்ற வேண்டும். ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதையும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

அனுமதியின்றி அள்ளப்படும் மணல்

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:- வெட்டாற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால், நாணல், கோரை புற்கள் வளர்ந்து ஆறு முழுவதும் தூர்ந்து ஓடை போல காட்சி அளிக்கிறது. மேலும், வெட்டாற்றில் ஆங்காங்கே அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் தண்ணீர் வந்தாலும் முறையாக கடைமடைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வெட்டாற்று பாசனத்தை நம்பியுள்ள கடைமடை விளைநிலங்களுக்கு தண்ணீர் வந்துசேராமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெட்டாற்றை தூர்வாரி, கடைமடை வரை தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story