இணையவழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்


இணையவழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் தெற்கு திட்டங்குளம் மகளிர் நற்பணி மன்றம் இணைந்து மதுப்பழக்கம், போதை பொருள் தடுப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சண்முகம் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் நிவேதா வரவேற்றார்.

சிறப்பு கருத்தாளர்களாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் நிரஞ்சனா தேவி கலந்துகொண்டு மன அழுத்தம், உடல் ஆரோக்கியம், ஆரோக்கியமான மனநலம் ஆகியவற்றை பற்றி பேசினார். கோவில்பட்டி வழக்கறிஞர் கார்த்திபராஜ், இன்றைய சூழலில் இளைஞர்கள் போதைக்கு எவ்வாறு அடிமை ஆகிறார்கள் என்பதை பற்றியும், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலாதேவி, வீரக்குமாரி ஆகியோர் சைபர் கிரைமில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மனநல சமூகநல ஆர்வலர் பெரியசாமி, தூத்துக்குடி ஆரோக்கிய கல்வியாளர் ஆறுமுகம், பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன் ஆகியோரும் பேசினார்கள். பயிலரங்கத்திற்கு 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மகளிர் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் சைபர் கிரைம் பற்றியும், போதை பொருள் தடுப்பு பற்றியும் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. தெற்கு திட்டங்குளம் மகளிர் நற்பணி மன்ற தலைவி ரஞ்சிதமணி நன்றி கூறினார்.


Next Story