நாமக்கல் மாவட்டத்தில் 1,154 மாணவ-மாணவிகளுக்கு ரூ.6½ கோடியில் விலையில்லா சைக்கிள்கள்-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் 1,154 மாணவ-மாணவிகளுக்கு ரூ.6½ கோடியில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல்:
விலையில்லா சைக்கிள்
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 2021-2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 446 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிவித்து உள்ளார்.
பெருமையின் அடையாளம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்களில் பயில 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுடன் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் என்ற நிலை மாறி, தற்போது அரசு பள்ளிகளில் பயில்வது பெருமையின் அடையாளமாக உள்ளது. மாணவ, மாணவிகள் இந்த சைக்கிள்களை நல்ல முறையில் உபயோகப்படுத்தி பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1,154 மாணவ-மாணவிகள்
இதேபோல் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 294 மாணவர்களுக்கும், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவிகளுக்கும், ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 கோடியே 59 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பொன்னுசாமி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகராட்சி தலைவர்கள் கலாநிதி, கவிதா சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.