நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:00 PM GMT (Updated: 22 Dec 2022 7:01 PM GMT)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் நாகையில் 1-ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் நாகையில் 1-ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.

நாகையில் கடல் சீற்றமாகவும் காணப்பட்டது. 10 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கரை திரும்ப அறிவுறுத்தல்

கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர். கடல் சீற்றமாக இருந்ததால் அக்கரைப்பேட்டை முகத்துவாரம் வழியாக துறைமுக பகுதிக்கு படகுகள் கடும் சிரமத்துடன் வர நேரிட்டது.

நேற்று நாகை, அக்கரைபேட்டை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. 700 விசைப்படகுகள், 4500 பைபர் படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாகையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தெற்கு-தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நிலை கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதையடுத்து நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


Next Story