மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்...? வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு, நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழைப்பெய்யக்கூடும்.
அடுத்த 24 நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கனமழையும் பெய்யக்கூடும். புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேடை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரை பலத்த காற்றானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும்,
மாலை முதல் நாளை அதிகாலை வரை சுமார் 85 கிலோமீட்டர் வேகத்திலும், பின்னர், நாளை காலை நேரத்தில் படிப்படியாக குறைந்து அதிகாலை முதல் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும், நாளை மாலை முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை பொறுத்தவரை இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை பலத்த காற்றானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.