தூத்துக்குடியில் சுழல்காற்று எச்சரிக்கை:விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் சுழல்காற்று எச்சரிக்கையை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடியில் பலத்த சுழல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவாகி உள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடனும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
விசைப்படகுகள்
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மற்றபடி வழக்கம் போல் வெயில் அடித்தது.