தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் வெளிநடப்பு
சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் வெளிநடப்பு செய்தனர்.
பேரூராட்சி கூட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் பிரதிபா கனகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒரு சுயேச்சை கவுன்சிலர் உள்பட 16 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்காக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 2 வது தீர்மானம் வாசித்தபோது, சுயேச்சை கவுன்சிலர் ஜெயகிருஷ்ணன் குறுக்கிட்டு கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு, தீர்மானத்தை வாசிக்க வேண்டும் என்றார்.
10 பேர் வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் விவாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:-
ஜெயகிருஷ்ணன் (சுயே): பேரூராட்சி பகுதிகளில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே, வீடு கட்ட 12 பேருக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ராஜீ (தி.மு.க.): இனி வருங்காலத்தில், பேரூராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கு வார்டு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் அனுமதி வழங்க கூடாது.
செயல் அலுவலர்: வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் கவுன்சிலர்களின் தலையீடு இருக்க கூடாது. எனவே இதுபற்றி கவுன்சிலர்கள் கேள்வி கேட்க வேண்டாம்.
செயல் அலுவலரின் இந்த பதிலை கேட்டதும் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 9 பெண் கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பரபரப்பு
பின்னர் கவுன்சிலர்கள் கூறுகையில், பேரூராட்சி கூட்டத்தில் தலைவருக்கும், செயல் அலுவலருக்கும் தான் அதிகாரம் உள்ளது. கவுன்சிலர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று செயல் அலுவலர் கூறுகிறார். அவரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றனர்.
கவுன்சிலர்களின் வெளிநடப்பு எதிரொலியாக, எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவடைந்தது. சின்னாளப்பட்டியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 17 வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் சின்னாளப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.