ரெயில்வே மேம்பாலம் கட்ட நிலம் வழங்கிய டி.ராஜேந்தர்: ரூ.8 கோடி இழப்பீடு பெறுகிறார்
வேலூரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நடிகர் டி.ராஜேந்தர் நிலம் வழங்கினார். அதற்காக ரூ.8.15 கோடி அவர் இழப்பீடாக பெறுகிறார்.
வேலூர்,
வேலூர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ரெயில் செல்லும் நேரங்களில் கேட் மூடப்படும் போது அந்த பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கேட் திறக்கப்பட்டதும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. மாங்காய்மண்டி அருகே மேம்பாலம் தொடங்கி கால்நடை ஆஸ்பத்திரி அருகே நிறைவடையும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டி.ராஜேந்தருக்கு ரூ.8 கோடி
அதற்காக அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சொந்தமான தியேட்டர் அந்த பகுதியில் உள்ளதால் மேம்பாலப் பணிகளுக்கு நிலம் தேவைப்படுகிறது என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து அதிகாரிகள் முன்னிலையில் 527 சதுரமீட்டர் நிலத்தை கிரையம் செய்து கொடுத்தார். இதற்காக அவருக்கு அரசு சார்பில் ரூ.8 கோடியே 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.