கோவையில் இருந்து நீலகிரிக்கு தினமும் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்
ட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க கோவையில் இருந்து நீலகிரிக்கு தினமும் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கொண்டு வரப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க கோவையில் இருந்து நீலகிரிக்கு தினமும் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கொண்டு வரப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.
பால் உற்பத்தி
நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலம் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவன விலை அதிகரிப்பு, வனப்பகுதியில் வறட்சி உள்பட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து விட்டது. மேலும் உற்பத்தி செலவை கணக்கிடும்போது பாலுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2,500 விவசாயிகள் மூலம் 4 ஆயிரம் கால்நடைகளில் இருந்து ஆவினுக்கு தினசரி சுமார் 18 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
தீவன பற்றாக்குறை
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரியில் பால் உற்பத்தி ேமலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்த வழிமுறைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆவின் மேலாளர் கூறியதாவது:-
ஊட்டி ஆவின் நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்ட முழுவதும் 94 பால் கொள்முதல் மையங்கள் உள்ளன. இவை மூலம் நாள்தோறும் 18 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் லிட்டர் வரை அந்தந்த பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டு விடுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ரூ.3 கூடுதல் செலவு
தொடர் பனிப்பொழிவு காரணமாக புற்கள் கருகி விட்டதால் ஒரு மாட்டுக்கு அரை லிட்டர் பால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த உற்பத்தி பாதியாக குறைந்து விட்டதால், கோவை ஆவின் மூலம் சுமார் 10 ஆயிரம் லிட்டர் பால் தினசரி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.சமவெளி பகுதியில் இருந்து பால் கொண்டு வரப்படுவதால் லிட்டருக்கு 3 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. 3 மாதங்களில் இந்த நிலைமை சீரான பிறகு கோவையில் இருந்து பால் கொள்முதல் செய்வது நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.