தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வார்டு-2 திருவள்ளுவர் வீதி, வ.உ.சி தெரு பின்புறம் உள்ள சாக்கடையில் குப்பைகள் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சந்தானகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை ஒன்றியம் பிள்ளாபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மண் சாலையை சிமெண்டு சாலையாக மாற்றுவதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணியில் கிடப்பில் போடப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலையை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பிள்ளாபாளையம், திருச்சி.

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோல் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் கர்ப்பிணிகள், முதியவர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு செல்ல சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இருங்களூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிச்சாண்டார்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

காயத்ரி, பிச்சாண்டார்கோவில், திருச்சி.


Next Story