தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூங்கா அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், உத்திரக்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான இடத்தில் அதிக அளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கருவேல மரங்களை அகற்றிவிட்டு இந்த இடத்தில் பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விக்னேஷ், உத்திரக்குடி, அரியலூர்.
சிதிலமடைந்த மின்கம்பங்கள்
அரியலூர் மாவட்டம், அரியலூர் டவுன் தேரடி பகுதியில் மின் வினியோகம் செய்யும் வகையில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் பழுதடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.