தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

மின்நுகர்வோர்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா கரூர் மின்சார வாரிய அலுவலகம் தனிநபரின் இல்லத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மின்சாரம் சம்பந்தமாக கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு வரும்போது மதியம் 3 மணிக்கு மின்சார வாரிய அலுவலர்கள் மின்சார வாரிய கதவுகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை.

பயனற்ற மின்மாற்றி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணியிலிருந்து தெற்குத்தொண்டைமான் ஊரணி செல்லும் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் மின்வினியோகம் செய்ய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி அமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை மின் வினியோகம் செய்யப்படாமல் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அந்த மின்மாற்றி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதை தெரிந்துகொண்ட மர்மநபர்கள் மின்மாற்றியிலுள்ள பல்வேறு மின்உதிரிபாகங்களை இரவு நேரங்களில் திருடிச்சென்றுள்ளனர். இதனால் பல்வேறு உதிரி பாகங்கள் இல்லாமல் உள்ளது. அது மட்டுமல்லாது அருகில் உள்ள மரம், செடி கொடிகள் புதர்போல் மண்டி காணப்படுவதோடு செடி, கொடிகள் மின்மாற்றியில் சுற்றிக்கொண்டு அந்த வழியாக சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடக்குத்தொண்டைமான், புதுக்கோட்டை.


Next Story