தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வண்ணான் ஏரி தூர்வாரப்படுமா?

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. தற்போது அரசு ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து வருகிறது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்காமல் அதன் அருகில் உள்ள எமனேரியிலிருந்து மண் எடுக்கப்படுகிறது. ஆனால் எமனேரி கடந்த ஆண்டும் தூர்வாரப்பட்டது. இப்போது தொடர்ந்து தூர்வாரப்பட்டு பாதாள சுரங்கம் போல் ஆகிவிட்ட நிலையிலும் தொடர்ந்து எமனேரியிலிருந்து மட்டுமே மண் எடுத்து வருகின்றனர். அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக எமனேரியிலிருந்து மண் எடுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வண்ணான் ஏரியில் வண்டல் மண் எடுத்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிந்தாமணி, அரியலூர்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், புதிய மதனகோபாலபுரம் சாலை டயானா நகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று விடுகின்றன. மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கலைத்துவிட்டு செல்வதுடன், குழந்தைகளை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், டயானா நகர், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், உத்திரக்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை காலப்போக்கில் சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து தற்போது மண் சாலைபோல் மாறி வருகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உத்திரக்குடி, அரியலூர்.


Next Story