தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தெரணி கிராம மாணவர்கள் தினமும் காரை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். தெரணி கிராம மக்களும் தினமும் காரை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக சென்று வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏறுகின்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் அரசு பஸ்சில் ஏறி பயணிப்பதால் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்சின் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களும் பல்வேறு காரணங்களுக்காக பெரம்பலூர் செல்வதால் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்பழகன், தெரணி, பெரம்பலூர்.

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி காமராஜர்புரம் சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் இந்த சாலையோரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் சாலையில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடனேயே சாலையில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சந்தோஷ், அரிமளம், புதுக்கோட்டை.

குறுகளான பாலத்தால் மக்கள் அவதி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே குறுகலான பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் இடு பொருட்களையும், விளைவுகளையும் இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குறுகிய பாலத்தை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குணசேகரன், மரவாபாளையம், கரூர்.


Next Story