தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான தார் சாலை
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கே பாலப்பட்டி, தேவச்சிகவுண்டனூர், பொரணி பொம்மணத்துப்பட்டி ஆகிய ஊர்களுக்கு தார் சாலை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார் சாலை மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து பாலப்பட்டி வரை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக மாறிப்போனது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து, தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மதுக்கரை, கரூர்.
வாகன ஓட்டிகள் அவதி
கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல்லுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த இரு வழி நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க இந்த இரு வழி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு முதற்கட்டமாக வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தில் இருந்து வெள்ளியணை மாரியம்மன்கோவில் வரை பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வெள்ளியணையை அடுத்துள்ள செல்லாண்டிபட்டி பகுதி தாளியாபட்டி பிரிவு அருகே உள்ள பாலம் மட்டும் அகலப்படுத்தபடாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெள்ளியணை, கரூர்.