'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவின் நடுவில் மின்கம்பம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மீன்கடை தெருவின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயபால், காவல்கிணறு.

புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு புறநகர் பகுதியில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டி அமைத்து பல ஆண்டுகள் ஆவதால், போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் இந்த தொட்டி இருக்கும் பகுதியை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள குடிநீர் தொட்டி சிறிய கொள்ளளவு கொண்டதாக உள்ளதால் அடிக்கடி மின்மோட்டாரை இயக்க வேண்டி இருக்கிறது. ஆகவே இந்த சிறிய குடிநீர் தொட்டியை மாற்றிவிட்டு, 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைத்து, மின்மோட்டார் அறையை பராமரிப்பு செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மணிகண்டன், கடம்பன்குளம்.

வழிகாட்டி பலகை தேவை

திசையன்விளையில் கால்நடை மருந்தகம் உள்ளது. வெளியூர்களில் இருந்து கால்நடைகளை கொண்டு வருபவர்கள் மருந்தகத்தை தேடி செல்வதில் சிரமமாக உள்ளது. ஆகவே மன்னராஜா கோவில் தெருவின் நுழைவு வாயில், அதன் துணை தெருவான ரிசியார் பொன்னையா தெருவின் முகப்பில் கால்நடை மருந்தகம் செல்லும் வழி என்று வழிகாட்டி பலகை வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வீணாக செல்லும் குடிநீர்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1-வது தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கோதர் மைதீன், முதலியார்பட்டி.

தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

கீழநீலிதநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுகிறது. இதன் அருகில் குடியிருப்புகளும் உள்ளது. இந்த குளம் சாலையோரத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். ஆகவே இந்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர்.

தண்ணீர் நடுவே மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் தண்ணீர் ஓடை வழியாக வெளியேறி குலசேகரன்பட்டினம் பகுதியில் தேங்கி கிடக்கிறது. ஆனால் இந்த பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளதால் கடல் நீர் மின்கம்பத்தை அரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஆபத்தான நிலை உள்ளதால், அந்த மின்கம்பத்தை மாற்றி தர கேட்டுக் கொள்கிறேன்.

திருப்பதி, குலசேகரன்பட்டினம்.

கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்

கோவில்பட்டி வட்டம் துறையூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் காமநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள். காலை 7.30 மணிக்கு பிறகு, 9.30 மணிக்கு தான் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அந்த பஸ்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி உள்ளது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி காலை 8 மணிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும்.

மேலும் துறையூர் கிராமம் ஈராச்சி விலக்கில் இருந்த பயணிகள் நிழற்கூடம் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெயில், மழை காலங்களில் சிரமப்பட்டு பஸ் ஏறிச்செல்லும் அவலம் உள்ளது. ஆகவே இங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலகிருஷ்ணன், துறையூர்.

பேவா் பிளாக் கற்கள் மீண்டும் பதிக்கப்படுமா?

திருச்செந்தூர் சன்னதி தெரு, வீரராகபுரம் தெரு பிரியும் பகுதி எதிரே பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகி உள்ளது. இந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே பக்தர்கள் நலன் கருதி அந்த பகுதியில் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகனசுந்தரம், திருச்செந்தூர்.


Next Story