தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் வேண்டும்
புதுக்கோட்டை நரிமேடு என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், நரிமேடு, புதுக்கோட்டை.
அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திற்கு டவுன் பஸ் ஒன்று தினமும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அந்த அரசு பஸ், மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீரமுத்து அருணாச்சலம், கீரமங்கலம், புதுக்கோட்டை.