தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நடையனூர் அருகே கோம்புப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் உள்ள தார்சாலையும், அதனை ஒட்டி போளூர் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றுக்குச் செல்லும் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன்காரணமாக தார்சாலை, அதையொட்டி வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றுக்குச் செல்லும் கான்கிரீட் சாலைகள் ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் கூட தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரங்கநாதன், கோம்புப்பாளையம், கரூர்.
போக்குவரத்து நெரிசல்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஷாநகர் கார்னரில் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை சாலையோரத்தில் நிறுத்தப்படுவதினால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிவேல், பள்ளப்பட்டி, கரூர்.
இருள் சூழ்ந்த பாலம்
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. அதேபோல் பல்வேறு வகையான லாரிகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும்போது இருள் சூழ்ந்த பாலமாக உள்ளது. எனவே இந்த பாலத்தில் மின்விளக்கு அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிவேல், குறுக்குச்சாலை, கரூர்.