தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள மசூதி அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருச்சி.
மின்தூக்கி பயன்பாட்டுக்கு வருமா?
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள 2 மின்தூக்கியில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மொத்தம் 7 தளங்களுடன் உள்ள இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்காக நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வந்து செல்லும் நிலையில் மற்றொரு மின்தூக்கி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே செயல்படாமல் உள்ள மின்தூக்கியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் கூடுதலாக மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை ஊராட்சி காமநாயக்கன்பாளையத்திற்கு காவிரி குடிநீர் கடந்த சில நாட்களாக சரியாக வருவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 750 குடும்பத்தினர் வசித்து வருவதினால் இப்பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காமநாயக்கன்பாளையம், திருச்சி.
கிடப்பில் போடப்பட்ட பணி
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், குமாரவயலூர் ஊராட்சி, குறிஞ்சி நகர், கொத்தட்டை காலனியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஷேக் அப்துல்லா, திருச்சி.