தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி
அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வரை செல்லும் பஸ்கள் காலை நேரத்தில் குறித்த நேரத்தில் வருவதில்லை. மேலும் ஒரு சில நாட்களில் பஸ்கள் வருவதே இல்லை. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ்கள் குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்லும் மணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் பஸ்சை முறையாக இயக்குவதற்கும், காலை 9 மணி வரை கூடுதல் பஸ் அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்குவதற்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
குடிநீர் இன்றி மக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் 11-வது வார்டில் எம்.பி.சி காலனி உள்ளது. இதில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பல நாட்களாக குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தலையில் சுமந்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் தெருவிளக்கும் எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், உடையார்பாளையம், அரியலூர்.