தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குடிநீர் குழாயில் உடைப்பு

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் தண்ணீர் பிடித்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென குடிநீர் பிடிக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேட்டமங்கலம், கரூர்.

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலையில் பல்வேறு விதமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டீக்கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கடைகளில் சேகரிக்கப்படும் கோழி கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் நொய்யல் ஆற்று ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் கொட்டப்படும் கழிவுகள் நொய்யல் ஆற்று தண்ணீரில் கலந்து செல்கின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சண்முகம், நொய்யல் குறுக்குச்சாலை, கரூர்.


Next Story