தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் சுற்றித்திரியும் ஆடுகள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பல வீடுகளில் வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் யாரும் பட்டியில் அடைத்து வளர்ப்பதில்லை. மாறாக காலையில் எழுந்தவுடன் ஆடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அந்த ஆடுகள் அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் நடுரோட்டில் சுற்றித்திரிந்து கொண்டுள்ளது. ஆடுகள் நடுரோட்டில் செல்வதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விடுகின்றனர். எனவே இதுகுறித்து அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர்.
சிதிலமடைந்த சடைச்சியம்மன் கோவில்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் கிராமம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிடாரி சடைச்சியம்மன் கோவில் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் உள்ளே செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கணேசபுரம், கரூர்.
ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் வடக்குத்தெரு அருகில் நங்காஞ்சி ஆற்றின் கரையோரத்தில் மயானம் ஒன்று உள்ளது. இந்த மயான பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது வழக்கம். அந்த நேரத்தில் இறந்தவர்களின் உடலுக்கு சடங்குகள் செய்யும்போது தண்ணீர் தேவைப்படும். இந்த மயான பகுதியிலோ அல்லது நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் இறந்தவரின் உடலை கொண்டு வரும்போதே குடங்களில் தண்ணீரை சுமந்து வந்து சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர்.