தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் பள்ளம்
கரூர் மாவட்டம் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூலிமங்கலம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தார் சாலையில் ஆங்காங்கே நெடுகிலும் சிதிலம் ஏற்பட்டு பள்ளமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலைக்கு ஏராளமான லாரிகள், பள்ளி பஸ்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சதாசிவம், மூலிமங்கலம், கரூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் தார் சாலை ஓரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு எற்பட்டு, மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தொடர் மழையின் காரணமாக கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாஸ்கரன், நடையனூர், கரூர்.