தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்மாற்றி
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, ராசிபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்களும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராசிபுரம், புதுக்கோட்டை.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் டவுன் கள்ளர் தெரு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் சிறிது மழை பெய்தாலும் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கள்ளர் தெரு, புதுக்கோட்டை.