தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சாலையோரம் கிடக்கும் பெயர் பலகை

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்டது தாளியாம்பட்டி கிராமம். இந்த ஊரில் இருந்து வேங்காம்பட்டி செல்லும் சாலை முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த வழியாக செல்லக்கூடிய ஊர்களின் பெயர்கள், அந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய தொலைவு ஆகியவற்றை குறிப்பிடும்படியான இரும்பினாலான வழிகாட்டி பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் பலத்த காற்றின் காரணமாக இந்த வழிகாட்டும் பெயர் பலகை சாய்ந்து சாலையோரம் விழுந்துவிட்டது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் வழி தெரியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தாளியாம்பட்டி, கரூர்.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக போட்டு வருகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு தார் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூட்டைகளில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டு, மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு மர்ம காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், புகளூர், கரூர்.


Next Story