'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாயில் உடைப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்லும் பிரதான சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அப்துல் அஜீஸ், மேலப்பாளையம்.

குப்பைகளால் பொதுமக்கள் அவதி

வள்ளியூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு 2-வது வார்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகள் கொட்டப்பட்டு, தீவைத்து எரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கும், தீவைக்காமல் இருப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஹரிதாஸ், வள்ளியூர்.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

கன்னியாகுமரி-திருச்செந்தூர் கடற்கரை சாலையில் திருவம்பலாபுரம் பஞ்சாயத்து தோட்டவிளை விலக்கில் கிழக்கு பக்கமும், மேற்கு பக்கமும் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகிறது. சாலையோரத்தில் தாழ்வாக மின்கம்பிகள் தொங்குவதால் எப்போது அறுந்துவிழுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கால்நடைகளும் அதிகமாக நடமாடும் இடமாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து 26-வது வார்டு செட்டியார் தெருவில் ஓடை பாலம் சேதம் அடைந்து உள்ளது. மேலும் பாலத்தின் ஒருபுறம் தடுப்புச்சுவர் இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. இந்த ஓடை பாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டுகிறேன்.

விஜய், களக்காடு.

சாலையை விரிவுபடுத்த வேண்டும்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டின் வடக்கு பக்கத்தில் வயல்களும், தெற்கு பக்கத்தில் குளங்களும் உள்ளன. இந்த சாலையில் பஸ்கள் வந்தால் எதிரே வரும் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும், இந்த சாலையில் மின்கம்பங்களில் மின்விளக்குகளும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்தவும், மின்விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

அரசு மேல்நிலைப்பள்ளி அமையுமா?

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கலில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளனர். ஆனால் இங்கு மேல்நிலைப்பள்ளிக்கூடம் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பல கிலோ மீட்டர் தொலைவில் சென்று படித்து வருகிறார்கள். ஆனாலும் போதிய பஸ் வசதி இல்லாததால் சிலர் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கணேசன், கீழக்கலங்கல்.

சேதம் அடைந்த பாலம்

செங்கோட்டை அருகே சீவலநல்லூர் செல்லும் வழியில் உள்ள ஓடைப்பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதில் ஏராளமான வாகனங்கள் செல்வதால் பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்றா டேனியல், இலத்தூர்.

ஓடையில் கிடக்கும் எச்சரிக்கை பலகை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் செல்லும் மெயின் ரோடு சந்தைப்பேட்டை தெரு முகப்பு வாயில் கீழ்ப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், பராமரிப்பு இல்லாததால் இந்த எச்சரிக்கை பலகை அருகில் உள்ள ஓடைக்குள் விழுந்து கிடக்கிறது. ஆகவே, இதை சரிசெய்து மீண்டும் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பாலமுருகன், கோவில்பட்டி.

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

எட்டயபுரம் நடுவிற்பட்டி மெயின் பஜாரில் உள்ள பொது சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் செயல்படாமல் இருக்கிறது. இதனால் பஜாா் பகுதியில் உள்ள பொதுமக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பொது சுகாதார வளாகத்தை சரிசெய்துதர வேண்டுகிறேன்.

சாமி, எட்டயபுரம்.


Next Story