'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

ெதன்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் திருக்குமரன். கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் முதலியார்பட்டி காந்திநகர் பகுதி 3-வது தெரு நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் உள்ள மருதமரத்தின் கிளை முறிந்து தொங்குவதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அவர் அனுப்பிய பதிவு நேற்று படத்துடன் வெளியானது. அதற்கு உடனடி தீர்வாக மரத்தின் கிளை வெட்டி அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் அபாய பள்ளம்

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தையொட்டி அமைந்துள்ள சாலையின் ஓரம் அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அபாய பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, நெல்லை.

மின்விளக்கு பொருத்தப்படுமா?

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலப்பாளையத்தை அடுத்து அமைந்துள்ளது தருவை ஊராட்சி. இங்கு அம்பை- நெல்லை பிரதான சாலையில் தருவை பஸ்நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் முகப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பல மாதங்களாக விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பாதையில் வர அச்சப்படுகின்றனர். எனவே, மின்கம்பத்தில் விளக்கு பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சக்தி முருகன், தருவை.

பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்

திசையன்விளை- நவ்வலடி சாலை அண்மையில் புதிதாக போடப்பட்டது. திசையன்விளையை அடுத்த தரைமட்ட பாலத்தின் அருகே சுமார் 20 மீட்டர் சாலை புதிதாக பாதி அளவிற்கு போடப்பட்டு, மீதி போடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, சாலை பணிகளை முழுமையாக முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும் குழியுமான நெடுஞ்சாலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்துக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் செங்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரிலும், கேசவபுரம், புளியரை எஸ் வளைவு ஆகிய பகுதிகளிலும் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக கட்டளை குடியிருப்பு வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுன்றன. எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள அபாய பள்ளங்களை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் வாசல் பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதாகவும், இதேபோல் அந்த பகுதியில் உள்ள 4 மின்கம்பங்களும் சேதம் அடைந்து இருப்பதாகவும் கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. அதன் எதிரொலியாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் கலவை போடப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு இல்லாத கால அட்டவணை

ஏரல் பஸ்நிலையத்தில் கால அட்டவணை அமைந்துள்ளது. தற்போது இந்த அட்டவணை போதிய பராமரிப்பின்றி விளம்பர பலகையாக மாறிவிட்டது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, பஸ் கால அட்டவணையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயினுலாப்தீன், ஏரல்.

சரியான நேரத்துக்கு பஸ் வருமா?

கூட்டாம்புளியை அடுத்த போடம்மாள்புரத்தில் இருந்து சுமார் 30 குழந்தைகள், சாயர்புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்கிறார்கள். இவர்கள் செல்வதற்கு தடம் எண் 52டி என்ற அரசு பஸ் மட்டுமே உள்ளது. கூட்டாம்புளிக்கு காலை 7.20 மணிக்கு வர வேண்டிய இந்த பஸ், சமீபகாலமாக 6.55 மணிக்கே சென்று விடுகிறது. அதன்பிறகு 8 மணிக்கு தனியார் பஸ் தான் உள்ளது. எனவே, அரசு பஸ் சரியான நேரத்துக்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மந்திரகுமார், போடம்மாள்புரம்.


Next Story