தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட அரிஜன காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும் இப்பகுதியில் பெயர் பலகை வைக்காமல் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் விலாசம் தெரியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரிஜன காலனி.

உப்பு ஓடையில் தூண் பாலம் கட்டப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணக்குடையான் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து கடலூர் மாவட்டம், பென்னாடம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் தாமரைப்பூண்டிக்கும், மதுராநகருக்கும் இடையே உள்ள உப்பு ஓடையை கடந்துதான் செல்ல வேண்டும். மழை பெய்யும்போது இந்த ஓடையை பொதுமக்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஓடையில் தூண் பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணக்குடையான்.

ஏரி ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் சித்தேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கங்கவடங்கநல்லூர்.

குடிநீர் வசதி வேண்டும்

அரியலூர் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி எதுவும் இல்லாமல் உள்ளதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நவின்குமார், அரியலூர்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

அரியலூர் மாவட்டம், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடித்து பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் மது பாட்டில்களை உடைத்து அட்டகாசம் செய்து செல்வதினால் மாணவ-மாணவிகளின் கால்களில் அவை குத்தி காயத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செங்குந்தபுரம்.


Next Story